தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை என்று த.வெ.க. கொடியை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். சிகப்பு, மஞ்சள் நிறத்தில் இருந்த கொடியின் மத்தியில் யானைகள் வாகைப் பூ, 28 நட்சத்திரங்கள் எனப் பல அடையாளங்களும், குறியீடுகளும் இடம்பெற்றிருந்தனர்.
அதே சமயம் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை த.வெ.க. கொடியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறிய அக்கட்சியின் தமிழக தலைவர் ஆனந்தன், “உடனடியாக யானையை கொடியில் இருந்து நீக்க வேண்டும்; இல்லை என்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுப்போன்” என்றார். இது ஒருபுறம் இருக்க, த.வெ.க.வின் கொடி வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடி போன்று இருப்பதாகச் சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், எங்கள் சமுதாய கொடிக்கும், த.வெ.க. கொடிக்கும் எந்த தொடர்பு இல்லை என வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஹரிஹரன் பிள்ளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழக கொடிக்கும் எங்கள் அமைப்பின் கொடிக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் கொடியில் புலி இடம்பெற்றுள்ளது. மேலும் அமைப்பின் பெயரும் அந்த கொடியில் இருக்கும். ஆனால் விஜய் கட்சிக் கொடியில் புலி இல்லை. எங்களுடைய அமைப்பு சமூக ரீதியிலானது.
நடிகர் விஜய் ஒரு உச்ச நட்சத்திரம். அவர் இன்றைக்கு ஜாதி, மதம் இனங்களைக் கடந்து பொதுவான ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் எங்கள் எங்கள் அமைப்பில் இருக்கிறார்கள். அவருக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருச்சியில் நடிகர் விஜய் போட்டியிட்டால் வரவேற்போம். தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் இது போன்ற சர்ச்சைகள் கிளப்பப்படுகிறது” என்றார்.