Skip to main content

வேளாங்கண்ணி லாட்ஜில் கொலை; தடுக்க சென்ற அதிமுக பிரமுகருக்கு கத்திக்குத்து!!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
Velankanni

 

 

வேளாங்கண்ணி தனியார் தங்கும் விடுதியில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. 

 

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தனியார் விடுதிகள் உள்ளன. அந்த விடுதிகளில் பல வெளி மாநில, மாவட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கரோனாவால் அவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். சுற்றுலா பயணிகளும், மாதா ஆலயத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்ததால், சில தனியார் லாட்ஜ்க்கள் மட்டும் போலிஸாருக்கு கப்பம் கட்டிவிட்டு மறைமுகமாக நடத்தி வருகின்றனர்.

 

அப்படி செயல்பட்டு வந்த ஜான்சன் பார்க் எனும் தனியார் விடுதியில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் முகுந்தடபுரம் பகுதியை சேர்ந்த முகேஷ் (32) என்பவரும், சேலம் மாவட்டம் காந்திநகர் பழைய காலனி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் 36 என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்திருக்கிறது.

 

இந்த நிலையில் 11 ம் தேதி இரவு முகேஷ், சதீஷ்குமார் இருவரும் பணியில் இருக்குப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி திடீரென அடிதடி வரை சென்றது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதை அருகே உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த சாம்சன் பிராங்கிளின் என்பவர் ஓடிவந்து விலகிவிட்டிருக்கிறார். ஆத்திரமடைந்த முகேஷ் தன் கையில் வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமாரை சரமாரியாக குத்த, அந்த கத்தியை பறிக்க முயன்ற சாம்சன் பிராங்கிளினுக்கும் கத்திக்குத்து விழுந்தது.

 

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிராங்கிளின் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். சாம்சன் பிராங்கிளின் வேளாங்கண்ணி அதிமுக நகர செயலாளராக இருந்து வருகிறார்.

 

முகேஷ் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் தனியார் விடுதிகள் இயங்கக்கூடாது என அறிவுறுத்தியிருந்தும் காவல்துறையின் அலட்சியத்தாலும், கையூட்டுப் பெற்றுக்கொண்டு திறக்கவிட்டதன் விலைவு கொலையில் முடிந்திருக்கிறது" என்கிறார்கள் அப்பகுதிவாசிகள்.

 

 

சார்ந்த செய்திகள்