கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 8000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அங்கு கபினி, கேஆர்எஸ் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு, காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல்லுக்கு வருகிறது. ஜூலை 24ம் தேதி காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7500 கன அடியாக இருந்த நீர் வரத்து ஜூலை 25ம் தேதி காலை வினாடிக்கு 8000 கன அடியாக அதிகரித்தது. இதனால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பைக் கருதி, ஒகேனக்கல்லில் கடந்த 23ம் தேதி முதல் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மூன்று நாள்களாக பரிசல்கள் இயக்கப்படாததால், ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மேட்டூர் அணைக்கு இரு நாள்களுக்கு முன்பு வினாடிக்கு 7000 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் பயன்பாட்டிற்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பைக் காட்டிலும் நீர் வரத்து உயர்ந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. ஜூலை 24ம் தேதி 40.15 அடியாக இருந்த நீர்மட்டம், ஜூலை 25ம் தேதி 41.15 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 12.69 டிஎம்சியாக உள்ளது.