கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டிக்கு தமிழக அரசு சார்பில் வீடு வழங்கப்பட்டது.
கரோனா காலகட்டத்தில், நிவாரணமாக வழங்கப்பட்ட 2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்களுடன் வேலம்மாள் பாட்டி மகிழ்ச்சியில் சிரிக்கும் புகைப்படம் வைரலானது. அந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏழையின் சிரிப்பு, நமது அரசின் சிறப்பு எனப் பதிவிட்டிருந்தார்.
இதன் பின்னர், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலம்மாள் பாட்டியை நேரில் சந்தித்திருந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலம்மாள் பாட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை ஒன்றினை விடுத்திருந்தார். அதில், தனக்கு வசிக்க வீடு இல்லை எனவும், தமிழக அரசு சார்பில் தனக்கு வீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.
இதனையடுத்து, இரவோடு இரவாக தமிழக அரசு சார்பில் வேலம்மாள் பாட்டிக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வீட்டைப் பெறுவதற்கு 75,000 ரூபாய் அரசுக்கு கட்ட வேண்டிய சூழல் இருந்ததால், அதனை தி.மு.க. இளைஞரணியின் துணை அமைப்பாளர் மூதலிங்கம் பிள்ளை, மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் செலுத்தினார்.