நாகை அருகே குருக்கத்தியில் மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் மீனவப் பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. டெம்போ வாகனத்தில் பயணம் செய்த மேலும் 7 மீனவப் பெண்கள் ஆபத்தான நிலையில் திருவாரூர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சையில் உள்ளனர்.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், சாமந்தான் பேட்டை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண்கள் 8 பேர் அதிகாலையில் டெம்போ வாகனத்தில் மீன்களை ஏற்றிக் கொண்டு வியாபாரம் செய்வதற்கு திருவாரூர் நோக்கி சென்றுள்ளனர். அப்போது கீழ்வேளூர் அருகே குருக்கத்தி பள்ளிக்கூடம் சென்ற போது வாகனத்தின் பின் பக்க டயர் வெடித்துள்ளது. இதில், நிலை தடுமாறிய வாகனத்தின் அச்சு முறிந்து தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கல்பனா என்கிற மீனவப் பெண்ணுக்கு தலையில் பலமாக அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
மேலும் படுகாயம் அடைந்த 7 மீனவப் பெண்களை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீன் வியாபாரத்திற்கு சென்ற மீனவ பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.