
சிதம்பரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி தினத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கி 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த 42 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் 43-வது ஆண்டின் நாட்டியாஞ்சலி விழா வரும் மார்ச் 8-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி முடிவடைகிறது. இதுகுறித்து சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா அறகட்டளையின் செயலாளர் சம்பந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில் சிதம்பரத்தில் தொடர்ந்து 43 ஆண்டுகளாக சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு அவர்களின் நாட்டியத்தை சிதம்பரத்தில் உள்ள நடராஜருக்கு அர்ப்பணிக்கின்ற தன்மையினால் இது சிறப்பு பெற்று வருகிறது. நாட்டியாஞ்சலி விழாவில் பாரம்பரியமிக்க பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகனி ஆட்டம், கதக் மற்றும் இதர வகை நாட்டிய கலைஞர்கள் 5 நாட்களும் சிதம்பரத்தில் தங்கி தங்கள் நாட்டிய அஞ்சலியை சிவபெருமானுக்கு செலுத்துகிறார்கள். இதில் இறை உணர்வும், அர்ப்பணிப்பு உணர்வும் நிறைந்து இருப்பதால், இந்த விழா மற்ற விழாக்களில் இருந்து மாறுபட்டு சிறப்பு பெற்று வருகிறது என்றார்.
இவருடன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் அறங்காவலர் குழு தலைவர் டாக்டர்.முத்துக்குமரன், துணைத் தலைவர் வி.நடராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணபதி, மருத்துவர் அருள்மொழிச்செல்வன், முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.