Skip to main content

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா; வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர்

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

veerapandiya kattabomman birthday incident in karur district

 

கரூரில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு வீரத்தமிழர் பண்பாட்டுக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேவராட்டம் நடத்துவதற்கும், பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும் போலீசார் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், இந்த நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஏராளமான இளைஞர்கள் தடையை மீறி ஜவஹர் பஜார் பகுதியில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், அதிக ஒலி எழுப்பிக்கொண்டு அதிவேகத்தில் சென்றனர். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் ஊர்வலம் நடத்த தடை விதித்தனர்.

 

அப்போது பெண் போலீஸ் எஸ்.ஐ. பானுமதி, ஒரு இளைஞரின் இருசக்கர வாகனத்தில் இருந்து சாவியை எடுத்துள்ளார். இதில் கோபம் அடைந்த இளைஞர்கள் அவரை தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் இருந்த நபர்கள் நாலாபுறமும் சிதறி அடித்து தலைதெறிக்க ஓடினர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக கரூர் பேருந்து நிலையம் அருகில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்நிலையில் அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், போலீசார் மீது கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய குற்றத்திற்காக தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட 13க்கும் மேற்பட்டோர் மீது கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்