கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியாக உள்ள வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் 47 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை பெய்யாததாலும், கர்நாடகாவில் இருந்து காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவின்படி தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீர் தர மறுத்ததால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து தடைபட்டது.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 46.5 அடியில் இருந்து 40 அடியாக குறைந்து ஏரி வற்றிய நிலைக்கு சென்றது. இதனால் ஏரியிலிருந்து பாசனம் பெறும் விளைநிலங்களுக்கு தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்தது. இதனால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், கடலூர் டெல்டா மாவட்டத்திற்கு வானிலை மையம் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்து திங்களன்று ஆரஞ்சு அலட் அறிவித்து. இதனால் கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் இடைவிடாத தொடர் மழை பெய்து வந்தது. இதனால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சேத்தியாதோப்பு, கொத்தவாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 45 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தெடர் மழையால் கிராம பகுதிகளில் உள்ள குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.
தொடர் மழை பெய்து வருவதால், வீராணம் ஏரிக்கு கருவாட்டு ஓடை, வெட்டு வாய்க்கால், செங்கால் ஓடை ஆகிய வாய்க்கால் வழியாக வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வீராணம் ஏரி விறுவிறு என நிரம்பி வருகிறது. தற்போது ஏரி 43.5 அடி நிரம்பியுள்ளது. ஏரியிலிருந்து வினாடிக்கு 50 கன அடி சென்னை குடிநீருக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. வீராணம் ஏரி நிரம்பி வருவதால் விவசாயிகள் சம்பா, தாளடி உள்ளிட்ட சாகுபடி நேரங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தண்ணீரை உரிய முறையில் தேக்கி விவசாயிகளின் பாசனத்திற்கு தேவையான நேரத்தில் தண்ணீரை வழங்கவேண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.