விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2007 முதல் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு ‘அம்பேத்கர் சுடர்’, ‘பெரியார் ஒளி’, ‘காமராசர் கதிர்’, ‘அயோத்திதாசர் ஆதவன்’, ‘காயிதேமில்லத் பிறை’ மற்றும் ‘செம்மொழி ஞாயிறு’ ஆகிய விருதுகள் வழங்கி சிறப்பித்துவருகிறது. கடந்த 14 ஆண்டுகளில், மேனாள் முதல்வர் கலைஞர், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மேனாள் முதல்வர் வெ. நாராயணசாமி, பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி உள்ளிட்ட 79 சான்றோருக்கு இதுவரை இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் 2021ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில், அம்பேத்கர் சுடர் விருது - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், பெரியார் ஒளி விருது - மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும், காமராசர் கதிர் விருது - நெல்லை கண்ணனுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது - கரியமாலுக்கும், காயிதே மில்லத் பிறை விருது - பஷீர் அகமதுக்கும், செம்மொழி ஞாயிறு விருது - ராமசாமிக்கும் வழங்கப்பட்டது.