இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக, பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள், மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுடன், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இருப்பினும் இந்தியாவில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளில் சிலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஆக்சிஜன் அதிகமாக உற்பத்தியாகும் மாநிலங்களில் இருந்து, மற்ற மாநிலங்களுக்கு இந்திய விமானப் படை விமானங்கள் மற்றும் ரயில்கள் மூலம் ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து செல்லவும், பாதுகாப்பாக செல்லவும் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உரிய பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் உற்பத்தியாகிற ஆக்சிஜனை நெருக்கடியான காலகட்டத்தில் கூட மோடி அரசால் தமிழகத்திற்கு தர முடியாது. பேரிடர் காலத்தில் நிதி தர முடியாது. ஜிஎஸ்டி திருப்பித்தர முடியாது. புதிய கல்விக் கொள்கை தமிழில் வெளியாகாது. ஏன் தமிழகத்திற்கு இத்தனை துரோகங்கள்? தமிழகம் இந்தியாவில்தானே இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் அவரது மற்றொரு ட்விட்டர் பதிவில், "வாக்கு எண்ணிக்கையின்போதும், தேர்தல் முடிவுக்குப் பின்னரும் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதை வரவேற்கிறேன். கரோனாவாலும், போதுமான மருத்துவ வசதி இல்லாமலும் மக்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தேவை களப்பணிதான். கொண்டாட்டங்கள் அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.