தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையினால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளம் போன்று கொட்டியது. அதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றலா பயணிகள் குளிப்பதற்குத் தென்காசி மாவட்டக் கலெக்டர் அனுமதியளிக்கவில்லை. எட்டுமாத காலம் தடை நீடித்தது. அருவிகளின் நகரை நம்பியிருந்த வியாபாரக் கடைகள் முடங்கியதால் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதனை வலியுறுத்திய அரசியல் கட்சிகள், குற்றாலத்தில் மக்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்தச் சூழலில் டிச. 20 முதல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தென்காசி கலெக்டர் கோபால சுந்தர் ராஜ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘டிச. 20ஆம் தேதி முதல் அருவிகளில் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. அதோடு சில கட்டுப்பாடு முறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மெயின் அருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள், 6 பெண்கள், ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் 10 பெண்கள், பழைய குற்றால அருவியில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள் 10 பெண்கள் மட்டுமே ஷிஃப்ட் படி குளிக்க அனுமதிக்கப்படுவர். குளிப்பதற்காக 2 மீட்டர் இடைவெளி விட்டு சுற்றுலா பயணிகள் நிற்பதற்கு குறியீடு செய்யப்படவேண்டும்.
காய்ச்சல் கண்டறியும் சோதனையும் நடத்தப்பட வேண்டும். பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை ஆகியவை வழங்கப்பட வேண்டும் கிருமிநாசினி, மற்றும் அறிவிப்பு பதாதைகள் வைத்திருக்க வேண்டும். அதே போன்று அருவிக்கரைகளில் அமைந்துள்ள கடைகள் மற்றும் பிற கடைகள் தவறாமல் அரசால் தெரிவிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதனைக் கண்காணிக்க பேரூராட்சி செயல் அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இன்ஸ்பெக்டர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது’. 8 மாத இடைவெளிக்குப் பின் அனுமதியளிக்கப்பட்டதால் வியாபாரிகள் மற்றும் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.