கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனின் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்றும் நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது கண்டனத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நக்கீரன் மூத்த ஊடகவியலாளர் பிரகாஷ் வழக்கம் போல, ஶ்ரீமதி மரணம் தொடர்பாக புலனாய்வு செய்ய நேற்று கள்ளக்குறிச்சி சென்றிருந்தார். அவரை பின் தொடர்ந்த சமூகவிரோதிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். சமூகவிரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.