Skip to main content

மோசடி வழக்கில் விசிக பெண் நிர்வாகி அதிரடி கைது!

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

vck female executive was arrested in a fraud case!

 

மோசடி வழக்கில் சிக்காமல், இரண்டு மாதமாக காவல்துறைக்கு போக்குக் காட்டி வந்த, சேலத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர செயலாளர் காயத்ரியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

 

சேலம் பச்சைப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி காயத்ரி (42). இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர துணைச் செயலாளராக இருக்கிறார். இவர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் சமூகநலத்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி வருவதாகச் சொல்லி, பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி லட்சக்கணக்கில் சுருட்டியுள்ளார்.

 

இவரை நம்பி பணம் கொடுத்த சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மொச்சைக்காட்டைச் சேர்ந்த மஞ்சுளா (32) என்பவர், காயத்ரி உள்ளிட்ட சிலர் மீது சேலம் மாநகர மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையில் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில், 'விசிக கட்சி நிர்வாகி காயத்ரி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தாட்கோ திட்டத்தில் மானிய உதவியுடன் கடன் பெற்றுத் தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார். அதை நம்பிய நான், எனக்குத் தெரிந்த பெண்களிடம் 24 லட்சம் ரூபாயை வசூலித்து காயத்ரியிடம் கொடுத்தேன்.

 

ஆனால் அவர் சொன்னபடி மானியக் கடனும், அரசு வேலையும் வாங்கித் தரவில்லை. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்தபோது அவர் சமூகநலத்துறை அதிகாரி இல்லை என்பதும் தெரிய வந்தது. அவர் மோசடியானவர் என்பதை அறிந்து, அவரிடம் நாங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டோம். அதில் 10 லட்சம் ரூபாய் திருப்பித் தந்து விட்டார். மீதம் 14 லட்சம் ரூபாயை தராமல் இழுத்தடித்து வந்தார். இதுகுறித்து கேட்டால் ஆள்களை வைத்து மிரட்டல் விடுத்தார்,' என்று புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

 

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆக. 20ம் தேதி, முதல்கட்டமாக காயத்ரியின் உறவினர் லெனின் என்பவரையும், அதற்கு அடுத்த நாள் அவருடைய தோழியான அழகாபுரத்தைச் சேர்ந்த சாவித்திரி, உறவினர் இளமாறன் ஆகியோரையும் கைது செய்தனர். காவல்துறை பிடி இறுகியதை அடுத்து காயத்ரி திடீரென்று தலைமறைவானார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் காயத்ரியோ, காவல்துறையில் சிக்காமல் போக்குக் காட்டி வந்தார்.

 

இதற்கிடையே அவர் முன்பிணை பெறும் நடவடிக்கையிலும் இறங்கினார். இந்நிலையில் சென்னையில் அசோக்நகர் பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு தீவிரமாக தேடி வந்த நிலையில், அக். 20ம் தேதி காயத்ரியை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். மேலும், அவருடைய கார் ஓட்டுநர்கள் இருவரும் பிடிபட்டனர். காயத்ரியிடம் இருந்து ஒரு சொகுசு கார், நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

காயத்ரியை சேலத்திற்கு அழைத்து வந்து சேலம் மாநகர தெற்கு சரக துணை ஆணையர் மதிவாணன் விசாரணை நடத்தினார். காயத்ரியை பிடிப்பதற்காக சேலம் காவல்துறையினர் வகுத்துள்ள வியூகம் குறித்தும், தனிப்படையினர் அவரை நெருங்கிச் செல்லும்போதெல்லாம் அது குறித்து முன்கூட்டியே தகவல் அளித்து, அவருக்கு மாநகர காவல்துறை தரப்பில் இருந்து சிலர் உதவியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

 

மத்தியக் குற்றப்பிரிவில் உள்ள இரண்டு காவலர்களும், அம்மாபேட்டை காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவரும் தனிப்படையினரின் நடவடிக்கைகளை காயத்ரிக்கு ரகசியமாக முன்கூட்டியே சொல்லி இருப்பதும், இதற்காக அவர்களுக்கு வழக்கறிஞர்கள் நண்பர்கள் மூலம் கணிசமான தொகை கைம்மாறியாதாகவும் சொல்லப்படுகிறது. அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

 

சேலம் மத்திய குற்றப்பிரிவில் மட்டும் காயத்ரி மீது 6 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவையிலும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. பிடிபட்ட காயத்ரியை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைத்தனர்.

 

மேலும், சென்னையில் காயத்ரிக்கு அடைக்கலம் கொடுத்த நபர்களிடமும் விசாரணை நடத்த காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம், விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்