சிதம்பரம் புறவழிச்சாலை அருகே நடேசன் நகரில் கட்சியின் நிர்வாகி முருகானந்தன் வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் பிரச்சாரம் முடிந்து இரவு நேரங்களில் தங்குகிறார். இந்த வீடு தேர்தல் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (9.10.2024) மாலை 7 மணியிலிருந்து எட்டு மணி வரை 7 பேர் கொண்ட குழுவினர் வருமான வரித்துறை என்றும் சரியான பதில் கூறாமல் தொல். திருமாவளவன் தங்கி இருக்கும் அறை மற்றும் அந்த வீடுகளில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனையில் பணம் உள்ளிட்ட எதுவும் இல்லை. இது குறித்து அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தாங்கள் சோதனை செய்தது குறித்தும் இங்கு எதுவும் இல்லை என கடிதமாக கொடுங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் கொடுக்கிறேன் என மழுப்பலாக சென்றுள்ளனர்.
இதுகுறித்து சோதனையின் போது உடன் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கௌதம் சன்னா செய்தியாளர்களிடம் கூறுகையில், “திடீரென ஏழு பேர் கொண்ட குழுவினர் தலைவர் தங்கி இருந்த வீட்டிற்குள் வந்து சோதனையில் ஈடுபட்டனர். அவரது அறை உள்ளிட்ட வீட்டிலிருந்த அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். வழக்கமாக தேர்தல் அலுவலகங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்வது தான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது வருமானவரித்துறையினர் திருமாவளவனின் வெற்றியை அச்சுறுத்தும் வகையில் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் அலுவலகத்தில் சோதனை செய்தது தலைவரை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும் உள்ளது. இதனால், அவரது வெற்றியைத் தடுக்க முடியாது” எனக் கூறினார்.
இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், விவசாய அணி மாநில நிர்வாகி முருகானந்தம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்