திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் கீழக்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள மக்கள் பழங்கால முறைகளை மாற்றாமல் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதுபோல் தான் தை பிறப்பதற்கு முன்பு மார்கழி மாதத்தில் வீட்டின் முன்பு கோலத்தில் வைக்கப்படும் பூசணிப்பூவை சேகரிப்பார்கள்.
அதை மார்கழி நாள் கடைசி நாளில் பசுமாட்டு சாணியுடன் ஏற்கனவே சேகரித்து வைத்திருக்கும் பூசணிப்பூவை சேர்த்து எருவாட்டியாக தட்டி காய வைக்கிறார்கள். அதை பொங்கல் பண்டிகை முடிந்து மூன்றாவது நாளில் பொங்கலை வழியனுப்பும் விழாவாக நடத்துகிறார்கள்.
அப்பொழுது ஊர் பொதுமக்கள் பூஜை பொருட்களுடன், பூஎருவாட்டியையும் அங்குள்ள முத்தாலம்மன் கோவிலுக்கு எடுத்து வருகின்றனர். அங்கு சாமி கும்பிட்டு பொங்கல் வாழ்த்து பாடல் பாடி அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அதில் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் பொங்கல் பண்டிகை குறித்து அறியும் விதமாக கும்மியடிக்க கற்றுத் தருகின்றனர். அதன்பின் மக்களுக்கு நன்றி சொல்லி விவசாயம் செழிக்க நோய், நொடியின்றி ஊர் மக்கள் வாழ வேண்டி பூ எருவாட்டியில் தீபம் ஏற்றி ஆற்றில் விட்டனர். இதை பழமை மாறாமல் ஊர்மக்கள் ஒன்றுகூடி ஆண்டு தோறும் இவ்விழாவினை சிறப்பாக நடத்தி வருகின்றனர்!