திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் உள்ள சி.எல் சாலையில் மே 12ந்தேதி, ஆய்வுக்கு சென்ற நகராட்சி ஆணையர் சிசில்தாமஸ், அந்த சாலையில் இருந்த பழங்களை எடுத்து சாலையில் வீசினார், அதேபோல் பழக்கடை தட்டுகளை கீழே கொட்டினார், பழவண்டியை அப்படியே சாய்த்து சாலைகளில் கொட்டினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இதனை கண்டு தமிழகமே அதிர்ச்சியானது. அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்களான கனிமொழி உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் தமிழக அரசு அந்த ஆணையர் மீது ஒழுங்கு நடைவடிக்கை எடுத்து, காத்திருப்போர் பட்டியலில் வைத்து, வாணியம்பாடிக்கு புதிய ஆணையராக பாபு என்பவரை நியமித்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வாணியம்பாடி 18 தொழில் சங்கங்களின் பேரமைப்பினர் சார்பில் சிசில் தாமஸை மீண்டும் வாணியம்பாடி நகராட்சி ஆணையராக பணி வழங்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருளை சந்தித்து மே 14ந்தேதி கோரிக்கை மனு அளித்தனர். அதனையும் மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டுள்ளார்.
அப்போது பாதிக்கப்பட்ட பழக்கடை பெண்கள் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதிகளில் தற்போதுவரை 5 நபர்கள் மட்டுமே கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வாணியம்பாடி நகராட்சி ஆணையரின் தீவிர விடாமுயற்சி பணியால் மட்டுமே இது சாத்தியமானது. மேலும் நகராட்சி ஆணையரின் செயல்பாட்டில் எங்களுக்கு சிறுதளவும் வருத்தம் இல்லை, அவர் செய்தது பொதுமக்களின் நலனுக்காகவே. ஆகவே தமிழக அரசு வாணியம்பாடி நகராட்சி ஆணையாராக மீண்டும் சிசில் தாமஸை பணியில் அமர்த்த வேண்டும் பாதிக்கப்பட்ட பழக்கடை பெண்களை பேட்டி அளிக்க வைத்தனர்.
இந்தசெயல் சமூக ஆர்வலர்களை இன்னும் கொதிப்படைய செய்துள்ளது. அவர் செய்த செயல் என்பது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது. சாதாரண ஏழை தொழிலாளர்களிடம் இப்படி நடந்துகொண்டவர், பல நிறுவனங்கள் அப்படி திறந்து நடத்துகிறது, அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. அவர் செய்தது சரிதான் என பாதிக்கப்பட்ட பெண்களையே பேசவைத்திருப்பது வேதனைக்குரியது. பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னிச்சையாக வந்து மனு அளித்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அப்படி மனு தந்ததாக தெரியவில்லை. நெருக்கடியால் வந்து தந்தது போல்தான் தெரிகிறது என்கிறார்கள்.