கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கக்கல்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து வெள்ளகோவில் நோக்கி வந்த சுற்றுலா வேன் சாலையைக் கடக்க முயன்றபோது, எதிரில் ஒரு இருசக்கர வாகனம் வந்துள்ளது. அந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வேன் ஓட்டுநர் வேனைத் திருப்ப முயன்றார். அப்போது ஓட்டுநரின் கட்டுபாட்டை மீறி வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த வேனில் 20க்கும் மேலான ஆண்கள் மற்றும் பெண்கள் பயணித்தனர். இந்த விபத்தில் அந்த வேனில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் மற்றும் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாந்தோனிமலை காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்குச் சென்றுவிட்டு சுற்றுலா வாகனத்தில் திரும்பி வந்துகொண்டிருந்த நபர்கள் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.