1 முதல் 9 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு தொடர்பாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. அதேபோல் மார்ச் 14 ஆம் தேதி பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2022 - 2023 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்புத் தேர்வினை 8.5 லட்சம் மாணவர்களும், அதே போல 11 ஆம் வகுப்புத் தேர்வினை 7.8 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளனர். 3,225 மையங்களில் இந்த பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்த தேர்வுப் பணிகளிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தேர்விலும் ஆங்கில மொழி பாடத்தேர்விலும் மாணவர்கள் அதிக அளவில் ஆப்சென்ட் ஆனதால் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் துறை உயரதிகாரிகளிடமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமும் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நேற்று கூட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்த போது, இந்த வைரஸ் காய்ச்சல் பரவல் விடுமுறை அளிக்கும் அளவில் இல்லை. அம்மாதிரியான சூழல் எதுவும் ஏற்படவில்லை எனச் சொல்லியுள்ளார்கள். எது எப்படி இருந்தாலும் புதிதாக வைரஸ் தொற்று பரவி வருகிறது. பாண்டிச்சேரி பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் விடுமுறை இல்லையா எனக் கேட்கிறார்கள். மருத்துவத்துறையும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் ஆலோசனை செய்து எங்களுக்கு என்ன அறிவுறுத்தல் கொடுக்கிறார்களோ அதன்படியே நடவடிக்கை இருக்கும்.
1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முன்கூட்டியே நடத்த எந்த திட்டமும் இல்லை. தேர்வுகள் நடைபெறும் தேதிகளிலும் எந்த மாற்றமும் இல்லை. இன்றைய ஆலோசனைக் கூட்டத்திலும் அதுபற்றி எதையும் விவாதிக்கப்போவதில்லை. இன்று நடத்த இருக்கும் ஆலோசனை என்பது பொதுத்தேர்வில் மாணவர்கள் ஏன் இவ்வளவு விடுப்பு எடுக்கிறார்கள் என்பது குறித்துத்தான். அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்துத்தான் ஆலோசனை நடத்த இருக்கிறோம்” எனக் கூறினார்.