உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 12வது லீக் ஆட்டம் 14ம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றதே கிடையாது எனும் வரலாற்றை தக்க வைத்தபோதிலும், இந்தப் போட்டியில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்கில் இருந்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ எனத் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அதேபோல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் மீண்டும், ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ எனக் கோஷம் எழுப்பினர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினரும், விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். என தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''ரொம்ப வருத்தம் அடைகிறேன். வணங்குகின்ற தெய்வங்களை, போற்றுகின்ற கடவுள்களை கழிவறைக்கு மட்டும்தான் இவர்கள் பயன்படுத்துகிறார்கள். கோவில் என்பது ஒரு புனிதமான வழிபாட்டுத் தலம். பண்டைய காலம் தொட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர். எதுக்கு வீதியில் நின்று சொல்கிறீர்கள். கிரிக்கெட் விளையாட்டு மைதானம் கட்டும் பொழுதே பார்ப்பதற்கு உடுக்கை போன்றும், விளக்கு கம்பங்கள் எல்லாம் சூலம் மாதிரியும் கட்ட ஆரம்பிக்கும் போது ஜெய் ஸ்ரீ ராம் கோசம் வருகிறது. நாளைக்கு இஸ்லாமிய நாட்டில் 'அல்லா' எனக் கத்துவார்கள். வேறொரு நாட்டுக்கு சென்றால் ஜீசஸ் எனக் கத்துவார்கள். இதெல்லாம் ரொம்ப கொடுமை.
ராமருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம். விளையாட்ட விளையாட்டாதான் பார்க்க வேண்டும். இந்த நாடு பிரிட்டிஷிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது இந்த நாட்டிற்காகப் போராடியவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷில் இருக்கும் இஸ்லாமியர்கள். போராடாதவன் ஆர்.எஸ்.எஸ், பிஜேபியை சேர்ந்தவர்கள். உனக்கு ஏதாவது நாட்டுப்பற்றை பற்றி பேச அருகதை இருக்கிறதா. 400 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி, நம்மை செக்கிழுக்க வைத்து, தூக்கிலிட்டுக் கொலை செய்த அவன் உனக்கு தோழமையுடன் இருக்கிறான். இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடிய பாகிஸ்தான், பங்களாதேஷ் உனக்கு பகையாளி என்றால் உளவியலாக உங்களுக்கு ஏதோ சிக்கல் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறதா இல்லையா? அரசியல் லாபத்தை தவிர ஆத்மார்த்தமான உணர்வு இருந்தால் இப்படி பேசுவார்களா? பாகிஸ்தானும் பங்களாதேஷும் நீ பெற்று போட்ட குழந்தைகள். 750 மீனவர்களை சுட்டுக்கொன்ற இலங்கை உனக்கு நட்பு நாடாக இருக்கிறது. சுதந்திரத்திற்காகப் போராடிய பாகிஸ்தான், பங்களாதேஷ் உங்களுக்கு எதிரியா...” எனக் கேள்வி எழுப்பினார்.