Skip to main content

மூன்று சிறுமிகளைப் பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு

Published on 12/10/2022 | Edited on 12/10/2022

 

 

child labour companies fined salem


சேலத்தில், குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டத்தை மீறி பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்த 3 சிறுமிகளை தொழிலாளர் நலத்துறையினர் மீட்டனர். மேலும், சிறுமிகளைப் பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தனர். 

 

சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் நிறுவனங்கள், நூற்பாலைகள் உள்ளிட்ட இடங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனரா? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அக். 10- ஆம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

 

சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் காவல்துறையினர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தனியார் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 

 

ஆய்வின்போது, சில நிறுவனங்களில் சிறுமிகள் பணியில் அமர்த்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இவ்வாறு விதிகளை மீறி பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்த மூன்று சிறுமிகளை அதிகாரிகள் மீட்டனர். அவர்களை மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைத்தனர். 

 

சிறுமிகளை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் இதேபோன்ற குற்றத்தில் ஈடுபட்டால், குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அல்லது, 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்