கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே லோடு வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், திருமணமாகி ஆறு மாதங்களே ஆன லோடு வாகன ஓட்டுநர் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலிருந்து மதுரைக்கு காய்கறி ஏற்றிவந்த லோடு வண்டி கரூர் மாவட்டத்தில் உள்ள தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தது. அதேசமயம், கரூர் முதல் வேலூர் வரை செல்லும் தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் அதே சாலையில் வந்துகொண்டிருந்தது. இரண்டு வாகனங்களும், தளவாபாளையம் அருகே எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், லோடு வண்டி ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், பேருந்தில் பயணம் செய்த பெண் உட்பட நான்கு பேருக்கும் படுகாயங்கள் ஏற்பட்டது. இவர்களை விபத்து நடந்த பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில், கோடு வண்டி ஓட்டுநரான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நசீர்(24) மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் செல்லும்போதே பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆகியுள்ளது. மேலும், பேருந்தில் பயணித்த பெண் உட்பட 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
உயிரிழந்த நசீரின் உடல், பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.