உலகம் முழுக்க இலக்கியங்கள் இருக்கின்றபோதிலும், அனைத்திற்கும் தலைமையாகவும், உலக பொதுமறையாகவும் பார்க்கப்படுவது திருக்குறள். இந்த உலகில் மனிதனாக பிறந்த யாவரும் இத்திருக்குறளின் அறநெறிகளைக் கொண்டு தங்கள் வாழ்வினை நெறிப்படுத்த முடியும். இத்திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் உருவம், அவரின் பிறப்பிடம் குறித்த விவாதம் இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பொதுமறையானான வள்ளுவனுக்கு காவிகள் பூசி ஒரிடத்தில் அடைக்கும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கிறது. அதேசமயம், உலகில் இன்னும் எந்த மொழிக்காரர்களின் நாவுக்கு வள்ளுவன் செல்லவில்லை என தேடி திருக்குறளை எடுத்துச் செல்லும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், பில்ரோத் மருத்துவமனையின் உதவியுடன் தனது கலைப் படைப்பின் மூலம் வள்ளுவனை வெவ்வேறு பரிணாமங்களில் உலகிற்கு காட்சிப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார் பெஷ்வா கிரியேட்டிவ் நிறுவனத்தின், கிரியேட்டிவ் இயக்குநராகச் செயல்படும் ஸ்ரீ பிரகாஷ். கோபி ஓவியனின் கைவண்ணத்தில் பலவிதமாக வள்ளுவரின் உருவங்கள் வரையப்பட்டு, அதிலிருந்து 12 ஓவியங்கள் தேர்வுசெய்யப்பட்டு காலண்டருக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்காலண்டர் படங்கள் அண்மையில் ஆன்லைன் தளத்தில் கசிந்தது.
இதுகுறித்து நாம் ஸ்ரீ பிரகாஷிடம் பேசினோம், “2016 -ல் தொடங்கப்பட்டது இம்முயற்சி. இதில் இன்னும் சில பணிகள் முடிக்கவேண்டியுள்ளது. இதனை பெரிய அளவில் வெளிக்கொண்டுவரவேண்டும் என எண்ணி இருந்தேன். ஆனால், இன்று இது பன்னாட்டு ஆன்லைன் நிறுவனங்களில் எனக்கே தெரியாமல் விற்பனைக்கு வந்திருப்பது வேதனை அளிக்கிறது. இதை யாரும் உபயோகப்படுத்தலாம். ஆனால், அதனை வியாபார ரீதியாகக் கொண்டு போகும்போதுதான் மன வேதனையாக உள்ளது. இன்று இந்த நவீன உலகத்தில் 170 வார்த்தைகளைக் கொண்டு ட்வீட் செய்கிறோம். ஆனால், அன்று அத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே வள்ளுவர் ஏழு சொற்களைக் கொண்டு ட்வீட் செய்துள்ளார். நான் அவரின் குறள் ஒவ்வொன்றையும் ட்வீட் என்றுதான் சொல்லுவேன். வள்ளுவன் அனைவருக்கும் பொதுவானவர்” என்றார்.