கோவை அருகே நடந்த வாகன விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் வைகோ.
மதுக்கரை அருகே கார் விபத்தில் படுகாயம் அடைந்த கேரள வாலிபருக்கு சிகிச்சை அளிக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உதவி செய்த செய்த சம்பவம் அந்த பகுதி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. கோவை மதுக்கரை அருகில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில், பாலக்காடு நெடுஞ்சாலையில் கேரளத்தில் இருந்து வந்த ஒரு கார் லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது. காரை ஓட்டி வந்த இளைஞரை, அப்பகுதி இளைஞர்கள், காரில் இருந்து வெளியே எடுத்து, 108 ஆம்புலன்ஸைத் தொடர்பு கொண்டு வரவழைத்து மனிதாபிமானத்துடன் செயல்பட்டனர். அதேநேரத்தில் அந்த வழியாக வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அந்த இளைஞரை ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு உதவினார்.
அந்த இளைஞர் படுகாயம் அடைந்ததால், ரத்தக்கசிவு அதிகமாக இருந்தது. அவருடன் வைகோ பேச முயன்றார். அந்த இளைஞர் லேசாகத் தலையை மட்டும் அசைத்தார். உடனே கோவை அரசு மருத்துவமனை இயக்குநரிடம் வைகோ செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசி, விபத்து குறித்த தகவலைக் கூறி, அந்த இளைஞருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்கிறேன் என இயக்குநர் தெரிவித்தார். படுகாயமடைந்த இளைஞருக்கு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது