கரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்ததும் மத்திய, மாநில அரசுகள், சுகாதாரத்துறையினர், பல்வேறு மருத்துவர்கள் நோய்ப் பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை அறிவுறுத்தல்களை கூறிவந்தனர். ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டிய மக்கள் தற்போது உயிர் பயத்திலும் தடுப்பூசி மருந்து தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையினாலும் கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமுடன் செல்கின்றனர்.
கடந்த காலங்களில் சினிமா தியேட்டர்கள் டிக்கெட் வாங்கவும், ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கவும் காத்திருந்த காலம் கட்ந்து தற்போது தடுப்பூசிக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி மக்களை காலம் காலமாக நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்தே காலம் கழிகிறது மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள். தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளது, அதே நேரத்தில் அரியலூர் மாவட்டத்தில் எந்தந்த முகாம்களில் எந்தெந்த தேதிகளில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். முறையாக சரியாக அந்த மையங்களில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி அந்தந்த பகுதி மக்கள் சென்று தடுப்பூசிகளை சுலபமாக செலுத்திக் கொள்கிறார்கள்.
ஆனால் கடலூர் மாவட்டத்தில் (வாம்மா மின்னல் என்பது போல) அதோ தடுப்பூசி வந்து உள்ளது என்ற தகவல் கிடைத்தவுடன் மக்கள் அரக்கபரக்க சுகாதார நிலையங்களுக்கு ஓடு கிறார்கள். அதற்குள் தடுப்பூசி தீர்ந்துவிட்டது என்று பதில் அளிக்கின்றனர் ஊழியர்கள். எனவே கடலூர் மாவட்ட ஆட்சியரும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கடலூர் மாவட்டத்தில் உள்ள சுகாதார மையங்களில் அல்லது சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் எந்தெந்த தேதிகளில் எந்த காலம் வரையில் தடுப்பூசிகள் போடப்படும் என்று சமூக வலைதளங்களிலும் தினசரி பத்திரிகைகளிலும் வெளியிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மக்கள் அலைக்கழிக்க அட வேண்டியதில்லை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதே போல் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களுக்கு டோக்கன் முறை கொண்டு வந்தால் அவர்கள் அதன்படி முறையாக சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள்.
இதனால் கால விரயம் ஆகாது தற்போது ஒவ்வொரு சுகாதார நிலையங்களையும் தடுப்பூசி இங்கு போடப்படுமா, அங்கு போடப்படுமா என்று தேடித் தேடி அலையும் அவலம் நடைபெறுகிறது. அதற்கு உதாரணம் மங்களூர், நல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி கேட்டு மக்கள் அலை மோதுகிறார்கள். நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தும் ஊசி போடும் இடத்திற்கு அருகே சென்றதும், தடுப்பூசி தீர்ந்துவிட்டது என அறிவிக்கிறார். மீண்டும் எப்போது வரும் என்பதை அங்கிருக்கும் மருத்துவர்களால் உறுதியாகக் கூற முடியவில்லை. இதனால் கால்கடுக்க காத்திருந்தும் தடுப்பூசி போட முடியாததால் அவர்களின் அத்தியாவசிய பணிகளும் கூலித் தொழிலாளர்களின் வருமானமும் பாதிக்கப்படுகிறது.