தமிழ்நாட்டில் 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் நாளை (03/01/2022) முதல் 15 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 வயது (அல்லது) அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் கோவின் 2.O போர்ட்டலில் (CoWIN 2.O PORTAL) பதிவு செய்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. பிறந்த ஆண்டு 2007 அல்லது அதற்கு முன் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடையவர்கள்.
கோவின் 2.0 தளத்தில் யனாளிகள் சுயமாக பதிவு செய்துக் கொள்ளலாம் (அல்லது) ஏற்கனவே உள்ள கணக்கு மூலம் இணையத்தில் பதிவு செய்யலாம் (அல்லது) தனிப்பட்ட மொபைல் எண் மூலம் புதிய கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதில், 10- ஆம் வகுப்புக்கான பதிவெண் (அல்லது) ஆதார் எண் (அல்லது) பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்திப் பதிவு செய்துக் கொள்ளலாம்.
இது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், "தடுப்பூசிகளைக் கொண்டு வரும் குழுவுடன் ஒருங்கிணைக்கும் தொடர்பு அதிகாரியாக செயல்பட ஒரு ஆசிரியரை நியமிக்குமாறு தலைமை ஆசிரியரை அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசியைப் போடுவதற்கு பள்ளிகளில் போதிய இடவசதியை வழங்கிடுமாறு அனைத்துப் பள்ளி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும்" என பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.