நாடு முழுவதும் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை, பள்ளியின் தலைமை ஆசிரியை இளங்கோதை தொடங்கி வைத்தார்.
இந்த பணியை மருத்துவர் பிரதீப் தலைமையில் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் டெக்னீசியன்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் செய்து வருகின்றனர். மாணவர்களின் பெற்றோர்களிடம் ஒப்புதல் பெற்று COWIN இணையதளம் வாயிலாக, மாணவர்களுக்கு பதிவு செய்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மாணவர்களின் ஆதார் அட்டை அல்லது பள்ளி அடையாள அட்டையை சான்றாக இணைத்து தடுப்பூசி போடப்படுகிறது. இந்த முகாமினை திருநாவலூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சாந்தி இளங்கோவன் பார்வையிட்டு, அனைவரும் முகக்கவசம் அணியவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் சமையலறை பகுதிகளை ஆய்வு செய்து, சமையலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். இந்த நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் அருள்மணி, சத்தியமூர்த்தி மற்றும் ராஜசேகரன், முத்தையன், ஜெய்சங்கர், மகேஸ்வரி, வாசுதேவன், அன்பு சோழன் உள்ளிட்ட ஆசிரியர்கள் உடனிருந்தனர்.