இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை சற்று குறைந்துள்ளது. கரோனா பரவலில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துகொள்ள பெரிதும் தடுப்பூசியையே நம்பியிருக்கின்றனர். இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் என இரண்டு வகை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகின்றன. தமிழகத்திலும் இரண்டு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகின்றன. அவ்வப்போது தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நிறுத்திவைக்கப்படுகிறது. சமீபத்தில் கூட சென்னையில் மூன்று நாட்கள் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று திருச்சியில் நான்கு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை திருச்சி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்கக் கூடிய முஜிபூர் ரகுமான் நேரில் பார்வையிட்டார். தடுப்பூசி கண்காணிப்பு மருத்துவராக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர் ஹக்கீம், தடுப்பூசி முகாம் போடுவது குறித்தான பணிகள் குறித்தும், முகாம்களில் பின்பற்றக்கூடிய நடைமுறைகள் குறித்தும் அவருக்கு எடுத்துக் கூறினார்.