பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கேட்டுப் போன காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் உத்தரபிரதேச போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தை நடத்தினர்.
இப்போது நாடு முழுக்க காங்கிரசார், ‘எங்கள் தலைவர் மீது தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி விசாரணை வேண்டும்’ என போராடி வருகிறார்கள். உத்திரபிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூற, ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் சென்றார்கள். அப்போது, அவர்கள் இருவரும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட, போராட்டம் தள்ளுமுள்ளானது.
இந்த நிலையில் 06.10.20 அன்று தமிழகம் முழுக்க காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டத்தில், ‘தலைவர்களை அவமரியாதை செய்த போலீசார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.