புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மார்ச் 13 முதல் 15 ந் தேதி வரை நடக்கும் மார்க்சிய தத்துவார்த்த பயிலரங்கத்தை தொடங்கி வைக்க வந்த இநதிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த போது கூறியதாவது,
கரோனா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை என்று மேம்போக்கான செய்திகளை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சொல்லி வருகிறார்கள். உண்மையில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான, வராமல் தடுப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. எந்த விதமான கட்டுமானப் பணிகளும் செய்யவில்லை என்று ஒரு மருத்துவரே சொல்லி இருக்கிறார்.
அதனால் இந்த நோய் வர அதிக வாய்ப்புகள் உள்ளது. குடிதண்ணீர் பாதுகாப்பு கிடையாது ஆகையால் உண்மையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நகைச்சுவையாக பேசி மாற்றி வருகிறார்கள். எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கேட்ட கேள்விக்கு அதை வயது முதிர்வு, சர்க்கரை நோய் என்று காரணம் காட்டி நகைச்சுவை ஆக்கி இருக்கிறார் முதல்வர். நையாண்டி கேளியாக்கி வருவது ஏற்புடையது அல்ல.
சி.ஏ.ஏ சட்டத்தை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு சொல்லி இருக்கிறது. சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தை தெளிவாக சொல்ல வேண்டும். ஆனால் போராட்டங்களில் சிக்கிக் கொண்டதால் சாக்கு போக்கு சொல்லி வருகிறார்கள்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை. அதை சொல்லி குழப்ப வேண்டாம். மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை பிளவுப்படுத்த நினைத்தால் போராட்டம் தொடரும். ஏப்ரல் 13 திருச்சியில் தொடங்கி ஏப்ரல் 28 வேதாரண்யத்தில் முடிய உள்ளது. உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம் போல இதுவும் இன்று சமூக மதநல்லிணக்கத்திற்காக நடத்தப்படுகிறது.
நடிகர் ரஜினி புதிய எந்த கருத்தையும் சொல்லவில்லை. கட்சி தலைமை ஒருவர்- முதல்வர் ஒருவர் என்று சொல்வது மிகப் பழைய விஷயம் தான். பல தலைவர்கள் அப்படித் தான் இருந்திருக்கிறார்கள். ஏற்கனவே நடைமுறையில் உள்ள செய்தி தான். இதை யாருக்கு என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. ரசிகர்கள் தான் புரிந்ததா என்பதை சொல்லனும். இது அடு்த்த திரைப்படத்திற்காக பேசுகிறாரா என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க பலமுள்ள கட்சிகள். அதனால் அரசியலுக்கு வரவில்லை என்பதை மனதில் உள்ளதை வெளிப்படையாக அறிவித்துவிட்டார். அதனால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொள்வது அவருக்கு நல்லது" என்றார்.