மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி, சேலம், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேலம் 9 செ.மீ., திருபுவனம் (சிவகங்கை) 7 செ.மீ., ராஜபாளையம் (விருதுநகர்) 6 செ.மீ., மானாமதுரை (சிவகங்கை), ஆத்தூர் (சேலம்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), அரூர் (தருமபுரி) தலா 5 செ.மீ மழை பதிவானது.
மத்திய வங்கக்கடல், மத்திய மேற்கு, கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் இரண்டு நாட்களுக்கு, மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.