திருச்சியில் அண்ணா, கலைஞர், அன்பிலார் சிலை திறப்பு விழாவிற்கும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பொதுகூட்டம் திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்றது. இதில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் திமுக தலைவர் ஸ்டாலின் உடன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோருடன் கலந்து கொண்டார்.
![u](http://image.nakkheeran.in/cdn/farfuture/DqMEmoUiwG93H-o2q_cKp6Lm7zzuY9kyKNLAsPZ2DoE/1560240533/sites/default/files/inline-images/udhayanidhi.jpg)
அண்ணா, கலைஞர், அன்பிலார் சிலை திறப்பு விழாக்களில் மேடையில் ஸ்டாலினுடன் உதயநிதி மற்றும் சபரீசனுடன் இருந்தனர். ஆனால் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் தலைவர்கள் வரிசையில் உதயநிதிக்கு இடம் கொடுத்திருந்தனர். அதே நேரம் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு மேடையின் முன்புறம் இடம் ஒதுக்கியிருந்தார்கள். அவருடன் புதுக்கோட்டை அப்துல்லா, மற்றும் அவா ஐடி குரூப் என சகிகம் அமர்ந்திருந்தார். அதே நேரம் மாவட்ட செயலாளர் கே.என்.நேரு முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் சால்வை வழங்கினார். உதயநிதிக்கு மேடையில் சால்வை போட்ட கே.என்.நேரு மறக்காமல் மேடையின் முன்புறம் அமர்ந்திருந்த சபரீசனுக்கும் சால்வை கொடுத்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், என்னைத் தலைவரின் மகன், நடிகர், முரசொலி நிர்வாக இயக்குநர் என அழைத்தார்கள். முரசொலி பதவி என்பது தலைவர் கருணாநிதி உயிரோடு இருக்கும்போது அவரால் வழங்கப்பட்ட பதவி. அவற்றை எல்லாம்விட மிகப் பெரிய, பலமான கடைக்கோடி தொண்டன் என அழைக்கப்படுவதையே நான் பெருமையாக கருதுகிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் எனது நண்பன் மகேஷ் பொய்யாமொழிக்காக திருவெறும்பூர் தொகுதியில் மட்டும் பிரசாரம் செய்தேன். இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். தி.மு.க.வில் பதவி, பொறுப்பு எதிர்பார்த்து நான் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
தி.மு.க குடும்பக் கட்சி என்று அனைவரும் கூறிவருகிறார்கள். ஆம், தி.மு.க குடும்பக் கட்சிதான். அன்பில் தர்மலிங்கம் தாத்தா, மகேஷின் தாத்தா மட்டுமல்ல, எனக்கும் தாத்தாதான். எனது தாத்தா கருணாநிதி, எனக்கு மட்டுமல்ல இங்குள்ள இளைஞர்கள் அனைவருக்கும் தாத்தாதான்.
சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். தலைவர் ஸ்டாலினை முதல்- அமைச்சர் பதவியில் அமர வைப்பது தான் எனது முக்கியமான வேலை. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை மட்டும் வீசவில்லை. தலைவர் ஸ்டாலினின் ஆதரவு அலையும் வீசியது. அதனால் தான் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் தெரு, தெருவாக சென்று பிரசாரம் செய்வேன்.
இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள திருநாவுக்கரசருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை தி.மு.கவுக்கு தாருங்கள். நாங்கள் வெற்றி பெற்று காட்டுவோம்.