தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் மேற்கு மாவட்டமான கொங்கு மண்டலத்தில் முதல் நிகழ்ச்சியாக இன்று ஈரோடு வந்திருந்தார்.
கொங்கு மண்டலத்தில் பிரதானமாக உள்ள கொங்கு வேளாள கவுண்டர்களின் அடையாளமாக போற்றப்படக் கூடியவர் சுதந்திர போராட்ட வீரரான தியாகி தீரன் சின்னமலை. ஆங்கிலேயர்களால் தீரன் சின்னமலை சிறைபிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட நாள் ஆடி-18.
இந்த நினைவு தினம் அரசு நிகழ்ச்சியாக ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது. கவுண்டர் சமுதாய அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் தீரன் சின்னமலையின் சொந்த ஊரான அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். ஏற்கனவே இங்கு திமுக தலைவரான மு. க. ஸ்டாலின் வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று கொங்கு மண்டலத்தில் முதல் நிகழ்ச்சியாக தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வாக இன்று உதயநிதி ஸ்டாலின் நேரில் வருகை தந்து தீரன் சின்னமலை சிலைக்கு மலர் மாலை சூடி மரியாதை செலுத்தினார். அதிமுகவில் 10 அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டும் ஒரே ஒரு அமைச்சரான செங்கோட்டையன் மட்டும் வந்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் வருகை கவுண்டர் சமூகத்திற்கு உற்சாகமும் கொங்கு மண்டல திமுகவுக்கு உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.