வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த சூழலில் நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இதன் எதிரொலியாக மேட்டுப்பாளையம் - உதகை இடையே இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில் சேவை டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை மலை ரயில் சேவை வரும் டிசம்பர் 13ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. மழை காரணமாக ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பயணிகள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை ரயில் ரத்து செய்யப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.