சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (24/07/2021) புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், தொழில்துறை முதன்மைச் செயலாளர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சுற்றுச்சூழல் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள நிலையான சுரங்கக் கொள்கை உருவாக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத கிரானைட் குவாரிகளை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்ற வேண்டும். புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் குத்தகை உரிமம் முதலான அனைத்தும் மின்னணு சேவை முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாடு கனிம நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூபாய் 250 கோடி வருவாய் ஈட்டத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் கூடுதல் சுரங்கப் பகுதிகளைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும்" என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.