அமெரிக்காவில் இருந்து கோழிகளை இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது என்றும், இந்தியா வரும் அதிபர் டிரம்புடன் அத்தகைய ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது என்றும் கால்நடை மற்றும் விவசாய பண்ணையாளர்கள் வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத்தின் செயலாளரும், கால்நடை மருத்துவருமான செந்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) விடுத்துள்ள அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில் சிறியதும், பெரியதுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் இருந்து கிடைக்கும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும், உள்நாட்டின் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணைகளில் 9 கோடி கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தக் கறிக்கோழிகள் தமிழகம் மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு உணவுக்காக அனுப்பப்படுகிறது.
முட்டைக்கோழி மற்றும் கறிக்கோழி வளர்ப்புப் பண்ணைத் தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நாட்டிற்கு கணிசமான வருவாயும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், பிப். 24ம் தேதியன்று (திங்கள்கிழமை), இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமருடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கோ-ழிகளை ஏற்றுமதி செய்வது குறித்தும் பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க கோழிகளை இந்தியாவில் விற்பனை செய்யும் வகையில் இறக்குமதி வரியை குறைக்கவும், 5 சதவீதம் வரை இறக்குமதி செய்ய அனுமதிக்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அரசின் உதவிகள் ஏதுமின்றி இந்தியாவில் கோழிப்பண்ணைத் தொழிலை கடந்த 50 ஆண்டுகளாக சிறு மற்றும் குறு விவசாய பண்ணையாளர்கள் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். அவர்களின் கடின உழைப்பால் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யப்படும் தொழிலாக இன்று வளர்ச்சி அடைந்துள்ளது.
கிராமப்புறங்களில் கோழிப்பண்ணை தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 கோடி பேர் வரை வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தொழில் மூலமாக ஆண்டுக்கு அரசுக்கும் பல கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. கிராமப்புறங்கள் வளர்ச்சி அடைந்துள்ளதோடு, ஏழை கிராம மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வும் கிடைத்திருக்கிறது.
அமெரிக்க கோழி உற்பத்தி வகைகளை இந்தியாவில் அனுமதித்தால் இங்கு கோழி, முட்டை உற்பத்தி தொழில் மிகவும் பாதிக்கப்படும். பலர் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது. எனவே, அமெரிக்க கோழிகளை விற்பனை செய்ய இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு மருத்துவர் செந்தில் தெரிவித்துள்ளார்.