மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த ஆர்.பிரியா (28) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை ரிப்பன் மாளிகைக்கு பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் வந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் 15 பேரில் மறைமுக தேர்தலில் கலந்துகொள்ள யாரும் வரவில்லை. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த ஆர்.பிரியா போட்டியின்றி தேர்வானார். அவருக்கு சென்னை ஆணையர் ககன்தீப் சசிங் பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்து மேயருக்கான அங்கியையும் வழங்கினார் . சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் மேயராக ஆர்.பிரியா தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் மிகவும் இளம்வயதில் சென்னையின் மேயரானவர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் ஆர்.பிரியா என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் என்.பி ஜெகன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். கரூர் மாநகராட்சி மேயராக திமுவை சேர்ந்த கவிதா கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த கல்பனா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸை சேர்ந்த சரவணன் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சியின் மேயராக திமுகவின் இந்திராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவின் உதயகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிவகாசி மாநகராட்சி மேயராக சங்கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த இளமதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி மேயராக திமுகவின் அன்பழகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சி மேயராக வசந்தகுமாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் மேயராக திமுவை சேர்ந்த மகேஷ் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மீனா தேவ் 24 வாக்குகள் பெற்ற நிலையில் திமுகவின் மகேஷ் 28 வாக்குகள் பெற்று மேயராக தேர்வானார். தஞ்சை மேயராக சண்.ராமநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சியின் மேயராக திமுகவை சேர்ந்த எஸ்.ஏ.சத்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயராக திமுகவை சேர்ந்த மகாலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.