Skip to main content

“தமிழன் இருக்கும் வரை திராவிடத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது” - துணை முதல்வர் உதயநிதி 

Published on 21/10/2024 | Edited on 21/10/2024
Until there is Tamil, Dravidianism cannot be touched says Udhayanidhi

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டமன்ற  தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலத்தின் இல்ல திருமண விழாவிற்கு மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான  உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சேலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்குச் சென்றார். அவரை திண்டுக்கல் மாவட்ட எல்லையான வேடசந்தூர்  அருகே உள்ள அரவக்குறிச்சி செக் போஸ்ட் அருகே மாவட்ட ஆட்சியர்  பூங்கொடி மலர் கொத்து கொடுத்து  வரவேற்றார். அதைத் தொடர்ந்து அய்யர் மடத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில், அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற  உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார்,  வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் ஆகியோர் துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலினை வரவேற்று சால்வை அணிவித்தனர்.

இந்த  திருமண விழாவிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றதைத் தொடர்ந்து திண்டுக்கல்  கிழக்கு மேற்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய  பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள், இளைஞரணியினர் உள்பட கட்சி  பொறுப்பாளர்கள் பெருந்திரளாகத் திரண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு  கொடுத்தனர். துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று முதன்  முதலில்அ திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகைதந்ததால் திண்டுக்கல் மாவட்ட  எல்லையான வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல் வரை சாலையின் இருபுறமும்  கொடி தோரணங்களும், விளக்குகளும் போட்டு உற்சாக வரவேற்பு  கொடுத்தனர். அதைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் தனியார் விடுதியில்  நேற்று இரவு தங்கினார். 

Until there is Tamil, Dravidianism cannot be touched says Udhayanidhi

அதன்பின் மாவட்ட அமைச்சர்களான ஐ.பெரியசாமி  மற்றும் சக்கரபாணி உள்பட மாவட்டச் செயலாளரான ஐ.பி.செந்தில்குமார்  ஆகியோருடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்பின்  இன்று காலை 9.20க்கு தனியார் விடுதியில் இருந்து நத்தம் புறப்பட்ட உதயநிதி  ஸ்டாலின் ஆண்டிஅம்பலத்தின் மகனான ஆண்டிச்சாமிக்கும், ராதாதேவிக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். இதில்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவு  வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட  செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் பாராளுமன்ற  உறுப்பினர் சச்சிதானந்தம், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன்  ஆகியோர் மணமக்களை வாழ்த்தியும் பேசினார்கள். 

அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்த திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி  அடைகிறேன். எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு நிறையத் தொடர்பு உண்டு. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இங்கு வந்துள்ளேன். இளைஞர் நலன்   துறை அமைச்சராக பொறுப்பேற்று முதலாக வந்தது திண்டுக்கல் மாவட்டம். நான் துணை முதல்வராக பொறுப்பேற்று நடத்தி வைக்கும் முதல் திருமணம்  இது. திருமணத்தை நடத்தி வைப்பதில் எனக்கு பெருமை. கொட்டும்  மழையிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு என்னை வரவேற்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது உங்களைச்  சந்தித்தேன் மிகப்பெரிய வெற்றியைத் திண்டுக்கல் தொகுதியில்  கொடுத்துள்ளீர்கள். 40க்கு 40 என நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு  ஆதரவு தந்தனர். வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

Until there is Tamil, Dravidianism cannot be touched says Udhayanidhi

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற  நிலை இருந்தது. அண்ணா, பெரியார், கலைஞர், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர்  குரல் கொடுத்தனர்.  நானும் சொன்னேன். நான் சொல்லாததைப் பொய்யாக  திருத்தி இந்தியாவில் பல நீதிமன்றத்தில் என் மீது வழக்குப் போடப்பட்டு  உள்ளது. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க சொன்னார்கள். நான் சொன்னா சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன் மன்னிப்பு கேட்க மாட்டேன். அந்த  வழக்குகளை நான் நீதிமன்றத்தில்  சந்தித்து கொண்டு இருக்கின்றேன். மற்ற  மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக நம் திராவிட மாடல் அரசு உள்ளது. 1  கோடியே 16 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை  கொடுக்கப்பட்டு வருகின்றது. விடுபட்டவர்களுக்கும் உரிமை தொகை  வழங்கப்படும். 

தமிழ்நாட்டில் பல பேர் இந்தியை திணிக்க பல்வேறு  வகையில் முயற்சி  செய்கின்றனர். நேரடியாக அது முடியவில்லை. அதனால்  தமிழ்த் தாய் வாழ்த்தில் சில வார்த்தைகளை நீக்குகின்றனர். புதிய கல்விக்  கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயல்கின்றனர். இதற்கெல்லாம் பல பேர் துணை போக முயன்றனர்.  முதல்வர் செய்த செயலால் அனைவரும் மண்ணை கவ்விக் கொண்டு  உள்ளனர். அண்ணா சூட்டிய தமிழ்நாடு பெயரை மாற்ற நினைத்தார் ஒருவர்.  தமிழக மக்கள்  எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடைசியில் மன்னிப்பு  கேட்டார். 

Until there is Tamil, Dravidianism cannot be touched says Udhayanidhi

தமிழ்த்தாய் வாழ்த்தில்  திராவிடத்தை நீக்கச் சிலர் கிளம்பி உள்ளனர்.  திமுக கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தமிழையும்,  தமிழனையும், திராவிடத்தையும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. இந்தி  திணிப்பைத் தமிழ்நாடு ஏற்காது. மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு  சுயமரியாதையோடு வாழ வேண்டும். மணமக்களுக்கு ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ பிறந்தால் அவர்களுக்கு அழகான தமிழ்  பெயரை சூட்ட வேண்டும்” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து பேரூராட்சி  அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த நூலகத்தை துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து நூலகங்களை பார்வையிட்டுவிட்டு  மதுரை சென்று விமானம் மூலம் சென்னை சென்றார்.

சார்ந்த செய்திகள்