17 வயதில் எண்ணற்ற வண்டிகளை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேலையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ஆர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதாகும் ஆர்யா பன்னிரண்டாம் வகுப்பு பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட சிறுவன் என்றுகூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சூர்யா போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான். சில மாதங்களாக அங்கு இருந்தவன் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கடலூர் கூர்நோக்கு இல்லத்திலிருந்து ரிலீஸ் ஆனான். வெளியே வந்தவன் மீண்டும் பைக் திருட்டில் ஈடுப்பட்டுள்ளான். கடலூர், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் மூன்று வண்டிகளையும் திருவண்ணாமலையில் 15 வண்டிகளும் திருடியதாக தெரிய வருகிறது.
மார்ச் 7 ஆம் தேதி காலை 7 மணி அளவில் குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்பரசு தலைமையில் திருவண்ணாமலை தண்டராம்பட்டு ரோடு அங்காளம்மன் கோயில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நிலையில் அழைத்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளான்.
தொடர் விசாரணையில் பைக் திருடன் என்பது தெரிய வந்த நிலையில் திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டான். இந்த சிறுவனுக்கு பைக் மீது தீராத காதல் இருந்துள்ளது. திருடிச் செல்லும் பைக்கை விற்பனை செய்யாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்துள்ளான். அவன் விருப்பப்படும் போது மட்டும் விரும்பிய பைக்கை எடுத்து ஓட்டிவிட்டு மீண்டும் பாதுகாப்பாக தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு இருந்துள்ளான். இந்த தகவலை அவன் சொன்னதும் போலீசார் ஆச்சரியமடைந்துள்ளனர். அவன் திருடிய 15 பைக்குகளை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். பைக் திருடு போனதாக புகார் தந்தவர்களை வரவைத்து ஆவணங்களை சரிபார்த்து அந்த பைக் ஒப்படைக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
வழக்கமாக பைக் திருடுபவர்கள் உடனடியாக அதனை வேறு ஒருவருக்கு விற்பதும் இல்லையென்றால் ஸ்பேர் பார்ட்ஸ்களை பார்ட் பார்ட்டாக பிரித்து விற்பதை தான் இதுவரை காவல்துறையினர் கேள்வி பட்டுள்ளனர். ஆனால் பைக் மீது கொண்ட காதலால் விரும்பிய பைக் திருடிக் கொண்டு போய் வீட்டிலேயே பத்திரமாக வைத்து அதை சுத்தம் செய்து பளபளப்பாக வைத்துக் கொண்டிருப்பவனை நினைத்து காவல்துறையினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.