புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் 1970- 1971 ஆம் ஆண்டு பதினொன்றாம் வகுப்பு படித்த மாணவர்கள் 48 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்க முடிவு செய்தனர். அதற்காக உள்ளூரில் இருந்த முன்னால் மாணவர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் படி ஒவ்வொருவரின் முகவரிகளையும் கண்டுபிடித்து தகவல் கொடுத்ததுடன் அழைப்பிதழ்களும் அச்சடித்து சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்தனர். மேலும் அப்போதைய பள்ளி ஆசிரிகளையும் அழைத்து அவர்களை கௌரவிக்க வேண்டும் என்று ஒரு சில மாணவர்கள் விரும்பியதால் பழைய ஆசிரியர்களையும் அழைத்தனர்.
அதன் படி ஞாயிற்றுக் கிழமை நெடுவாசல் பள்ளி வளாகத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் ஒவ்வொரு வரும் பள்ளி வளாகத்தில் சுற்றி பார்த்து தங்களது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். பழைய நணபர்களை பல வருடங்களுக்கு பார்த்த சந்தோசத்தில் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து முன்னால் ஆசிரியர்கள் வரும் போது சந்தோசத்தில் கண்கள் கலங்க கட்டி அணைத்து கரம் கூப்பி அழைத்துச் சென்று அமரச் செய்தனர்.
அப்போது பலரும் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தாங்கள் படித்த வகுப்பறை கட்டிடங்கள் இப்போது இல்லை என்றனர். ஆசிரியர்கள் பேசும் போது 48 வருடங்களுக்கு பிறகு அப்போதைய மாணவர்கள் எங்களை இன்னும் நினைவு வைத்து அழைத்து சிறப்பித்திருக்கிறார்கள். அவர்களின் செயல்களை எங்களால் மறக்க முடியாது என்றனர். மேலும் பலர் பேசும் போது பழைய நண்பர்கள் இனி எப்போது பார்த்துக் கொள்வோம் என்று தினம் தினம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இந்த சந்திப்பு எங்களை மகிழச் செய்துள்ளது என்றனர். விழாவில் முன்னால் ஆசிரியர்களுக்கு முன்னால் மாணவர்கள் நினைவுப் பரிசாக தங்க நாணயம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள்.