சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்குக் கடந்த அக்டோபர் மாதத்தின் ஊதியம் இன்னும் வழங்கவில்லை. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வலியுறுத்தியும் இதுவரை ஊதியம் வழங்கவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை மருத்துவமனையில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பேரணியாகச் சென்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் திருப்பதியிடம் இது குறித்து மனு அளித்தனர்.
பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசனிடமும் இதுகுறித்து அவர்கள் மனு அளித்தனர். அப்போது துணைவேந்தர் மற்றும் மருத்துவக்கல்லூரி புல முதல்வர், உயர்கல்வி துறையிலிருந்து மருத்துவத் துறைக்கு முழுமையாகக் கல்லூரியை மாற்றுவதில் இன்னும் சில சட்ட நடவடிக்கைகள் உள்ளது. எனவே விரைவில் அக்டோபர் மாத ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். மருத்துவர்கள் ஊதியம் கேட்டு மனு கொடுத்த சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.