அ.தி.மு.க.வின் மாநில தலைமைக் கழகப் பேச்சாளராக இருப்பவர் தூத்துக்குடியின் கருணாநிதி. மே.7ம் தேதி அன்று நகரின் கட்சியின் தொழிற்சங்கத்தின் செயலாளர் நடத்திய முறைகேட்டினை விவரித்து நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைமைக் கழகத்திற்கு புகார் மனு அனுப்பியிருக்கிறார்.
கட்சியில் நடந்த, கட்சிக்குப் புறம்பான வகையில் கட்சி நிதியை கட்சியின் தலைமை நிர்வாகியே வழங்கத் துணை போனதை கட்சியின் நிர்வாகியே வெளிப்படுத்தியது நகரின் அ.தி.மு.க. அரசியல் லெவலில் பரபரப்புச் சூட்டைக் கிழப்பியுள்ளது.
மாநிலப் பேச்சாளரான கருணாநிதி தன் புகார் மனுவில்,
கடந்த சில வருடங்களுக்கு முன்பு புரட்சித் தலைவியால் தொடங்கப்பட்ட திட்டமான அண்ணா தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் நழிந்த தொழிலாளி ஒருவரைத் தேர்வு செய்து அவர் நலன் பொருட்டு அவருக்கு மே.01 ஆம் தேதி ஒரு லட்சம் கட்சியே வழங்குவதற்கான திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்படி புரட்சித்தலைவி உயிரோடு இருந்தவரை அனைத்து தொழிற்சங்கத்திலும் முறையாக நடந்து வந்தது. அவரது மறைவிற்கு பின்பு அத்திட்ட நிதி முறையற்ற வகையில் தகுதியற்றவர்களுக்குத் தரப்படுகிறது என்பதே குற்றச்சாட்டு.
மாநிலப் பேச்சாளரான கருணாநிதி சொல்வதாவது,
கட்சியின் அண்ணா தொழிற்சங்கங்களில் உறுப்பினராகி சந்தா கட்டி வரும் மிகவும் நலிந்த தொழிலாளர் யார் என்று பார்த்து விசாரித்து தொழிற் சங்க செயலாளர் தலைமைக் கழகத்திற்கு பரிந்துரை செய்யவேண்டும். அதன்படி கட்சி அவர்களின் குடும்ப நலன் பொருட்டு தொழிலாளர் தினமான மே.01 ஆம் தேதி அன்று ஒருலட்சம் ரூபாய் வழங்கும். இது கட்சியில் பின்பற்றப்படும் மரபு.
ஆனால் தூத்துக்குடியின் டேக் நிறுவனத்தின் தொழிலாளர்களின் அண்ணா தொழிற்சங்க செயலாளரான ராஜா அங்கு மாதம் கணிசமானதொரு தொகையை சம்பளமாக வாங்குகிறார். அவரது குடும்பம் நல்ல வசதியிலிருக்கிறது. ஆனால் புரட்சித் தலைவி மறைந்து விட்ட காரணத்தால் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற தைரியத்தில் கடந்த வருட டேக் நிறுவன நலிந்த தொழிலாளிக்கான நிதி, ஒரு லட்சத்தை தன் குடும்ப உறுப்பினரும், அண்ணனுமான மணி என்பவரின் பெயரில் ஒதுக்கி வழங்கி விட்டார்.
இந்த முறைகேட்டினை விசாரித்து டேக், ராஜா மீது நடவடிக்கை எடுத்துப் பணத்தை மீட்டு நலிந்த தொழிலாளிக்கு வழங்கிட வேண்டுமென்று முதல்வர்,தலைமைக்கழகம் மற்றும், அண்ணா தொழிற் சங்க பேரவை கன்வீனர் ஜக்கையன் எம்.எல்.ஏ. அவர்களுக்கும் புகார் மனு அனுப்பியிருக்கிறேன் என்கிறார் கனத்த வேதனையோடு.
இது குறித்து நாம் டேக் ராஜாவைத் தொடர்பு கொண்டதில்,
மணி என்னுடைய சகோதரன் தான். அவரது குடும்பம் தனி. வசதியற்ற அவரும் அவரது மனைவி அன்புக்கனியும் தொழிற்சங்க உறுப்பினர்கள். கடந்த வருடம் அன்புக்கனி தன்னுடைய இருதய சிகிச்சைக்காக தொழிலாளர் நல நிதிக்காக விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பம் கட்சித் தலைமைக்குச் சென்று அங்குள்ள கமிட்டியின் ஆய்வுக்குட்பட்டு அவர்களால் நிதிக்கான ஒப்புதல் தரப்பட்டது. அந்த நிதி வந்து சேர்வதற்குள் அவர் காலமாகிவிட்டார். அது தற்போது அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. எனக்கும் அதற்கும் சம்பந்தமே கி்டையாது. முழுக்க முழுக்க கட்சித் தலைமையே ஆய்வு செய்து கொடுக்கும் போது நான் எப்படி காரணமாவேன் என்கிறார் சூடாக.
ஆனால் தொழிலாளி நிதி மோசடி விவகாரம், தொழிற்சங்க வட்டாரத்தில் சூறாவளியாய் சுழல்கிறது.