காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின் படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத விவகாரம், தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகம் போராட்டக்களமாக காட்சி அளிக்கிறது.
இதனிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரச்சினையால் அ.தி.மு.க. முடக்கி வருகிறது.
இதுகுறித்து, அதிமுக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,
காவிரி பிரச்சினையில், நாடாளுமன்றத்தில் நாங்கள் 20-வது நாளாக போராட்டம் நடத்தி உள்ளோம். இந்த போராட்டம் மேலும் தொடரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மீண்டும் அடுத்த கூட்டத்தொடரிலும் இதே போராட்டத்தை நடத்துவோம். காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கைக்கு 1974-ம் ஆண்டில் இருந்தே மத்திய அரசுகள் செவி சாய்க்காமல்தான் இருந்து வருகின்றன. அதனால்தான் மக்கள், மாநில கட்சிகளுக்கு ஓட்டுப்போடுகிறார்கள். தேசிய கட்சிகளுக்கு வாக்கு அளிப்பது இல்லை. காவிரி பிரச்சினையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் வரையில் எங்களது போராட்டம் தொடரும்.
மத்திய அமைச்சர் விஜய் கோயல் என்னை சந்தித்ததில் முக்கியத்துவம் எதுவும் இல்லை. காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அவர் என் வீட்டுக்கு வந்தார். டீ குடித்து விட்டு சென்றார். காவிரி போராட்டம் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
தமிழக ஆளுநர் பன்வாரலால் புரோகித்தும் எனக்கு நண்பர்தான். அவரை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். காவிரி மேலாண்மை வாரியம் பற்றி ஆளுநரிடம் பேச முடியாது. மந்திரிகளிடம்தான் பேச முடியும் ஆளுநருக்கு அதற்கான அதிகாரம் கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.