தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, "தமிழக மக்களைப் பற்றி கவலைப்பட மோடியை விட சிறந்த தலைவர் இல்லை. தமிழ் மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி. பெண்களை இழிவுபடுத்தும் திமுக கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். சோனியாவிற்கு ராகுலைப் பற்றியும், ஸ்டாலினுக்கு உதயநிதியைப் பற்றியும்தான் கவலை. திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. பேரவைத் தேர்தலை பாஜக நடத்தவில்லை, தேர்தல் ஆணையம்தான் நடத்துகிறது. அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூரை வணங்குகிறேன். எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதா தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். தமிழகத்தை ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளனர்" என்றார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், பாமக நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள், கட்சிகளின் தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.