நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து இன்று இரண்டாவது நாளாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேல குளம் ஆகிய பகுதிகளில் திண்ணைப் பிரச்சாரம் செய்தவர் இன்று மாலை ஏர்வாடி நகரில் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.
ஏர்வாடி, திருக்குருங்குடி, மாவடி வழியாக பிரச்சாரத்தில் மக்களை சந்தித்து பேசினார். திரளான கூட்டத்தில் அவர் பேசியதாவது,
நடப்பது பாஜக ஆட்சி. முன்பு ஆட்சி செய்த எம்ஜிஆர் ஆட்சி போன்று இல்லை, ஜெயலலிதா ஆட்சி போன்று நடக்கவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால் பிஜேபியுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார்கள். நீட் தேர்வு, ஜிஎஸ்டி போன்றவைகளை ஆதரித்திருக்க மாட்டார். அவர் எதிர்த்த திட்டங்களை இன்று தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியால் நடத்தப்படுகிறது. ஆனால் இங்கு நடப்பது எடப்பாடி ஆட்சியும் இல்லை பிஜேபி ஆட்சி நடக்கிறது என்று மாறுபட்ட வகையிலான பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்த பிரச்சாரம் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.