
தமிழகத்தில் கரோனாவுக்கானச் சிகிச்சை சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தமிழக அரசைப் பாராட்டியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், "தமிழகத்தில் கரோனாவுக்கானச் சிகிச்சை சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி ஒத்திகை ஏற்கனவே மூன்று மாநிலங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை மூன்று இடங்களில் ஆய்வு செய்தேன். தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா தடுப்பூசி பணிகள் திருப்தியையும், மனநிறைவையும் ஏற்படுத்துகிறது" என்றார்.