Skip to main content

நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஊழல்கள்: ராமதாஸ்

Published on 13/12/2017 | Edited on 13/12/2017
நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஊழல்கள்: ராமதாஸ்

பாலிடெக்னிக் ஆசிரியர்கள் தேர்வு ஊழல் - குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 



தமிழ்நாட்டில் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள்களை திருத்துவதில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாகவே முடிவுகள் திரும்பப்பெறப்பட்டாத நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இதில் ஊழல்கள் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 2000 பேரில் 220க்கும் மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றி எழுதப்பட்டுள்ளன. இவர்கள் ஒவ்வொருவருக்கும் 50 முதல் 100 மதிப்பெண்கள் வரை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு பாடப்பிரிவுக்குமான தரவரிசைப் பட்டியலில் ஆயிரம் இடங்களுக்கும் அப்பால்  இருந்தவர்கள் முதல் 100 இடங்களுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றனர். உதாரணமாக, கணிதப் பாடப்பிரிவில் வெறும் 27 மதிப்பெண் மட்டுமே எடுத்த ஒருவர் 115 மதிப்பெண் எடுத்ததாக மாற்றம் செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட்டுள்ளார். அதேபோல், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஏராளமானோருக்கு மதிப்பெண்களை மாற்றப்பட்டுள்ளன.

இதனால் உண்மையாகவே அதிக மதிப்பெண் பெற்றிருந்த மாணவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, விரிவுரையாளராகும் வாய்ப்பை இழந்துள்ளனர். இது மிகப்பெரிய சமூக அநீதியாகும். தகுதியில்லாத மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி வேலை வாங்கித் தருவதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கையூட்டு பெறப்பட்டிருக்கிறது. பணி நியமன ஆணைகள் வழங்கப்படுவதற்கு முன்பாகவே இந்த முறைகேடு அம்பலமானதன் பயனாகவே தேர்வு முடிவுகளை  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற்றிருக்கிறது. இதன்மூலம் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் நியமனத்தில் நடைபெறவிருந்த மிகப் பெரிய மோசடி தடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் கூட, இந்த விஷயத்தில் தகுதியில்லாத மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்குவற்காக நடந்த ஊழலை மறைக்க முடியாது. அதற்குக் காரணமானவர்கள் தண்டனையின்றி தப்பிப்பதை ஏற்க முடியாது. எனவே, இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டப் போட்டித் தேர்வுகளில் இதேபோல் ஏதேனும் மோசடி நடந்துள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். இந்த ஊழலில் சம்பந்தப்பட்டோர் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

சார்ந்த செய்திகள்