திண்டுக்கல்லில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பேகம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் துரை மணிகண்டன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு நாகல் நகர் மேம்பாலம் அருகே மாநகர் மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் தலைமையில் ஆள் உயர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வேங்கைராஜா உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
அதன்பின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு மாநகர நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி குறித்து மாநிலத் தலைவர் பல கருத்துக்களை கேட்டார். அதற்குமுன் பத்திரிக்கையாளர்களிடம் செல்வப்பெருந்தகை பேசும்போது, “தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உத்தரவின்பேரில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டம் தோறும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு ஏதேனும் மாற்றம் செய்ய இருந்தால் அதுகுறித்து தலைமைக்கு தெரிவிக்கப்படும். கிராமம், நகரம், ஒன்றியம் என எவ்வித பாரபட்சமின்றி அனைத்து நிர்வாகிகளின் கருத்துக்களையும் கேட்கப்படும். பகுஜன சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புலன் விசாரணை சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று கூட மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் யார் சம்மந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் வேறு எதுவும் சொல்லக்கூடாது மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற போது கூட கோட்சே குறித்து காங்கிரஸ் எவ்வித தவறான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இதேபோல சாவர்க்கர் குறித்தும் தவறான கருத்துக்களை தெரிவிக்கவில்லை. பா.ஜ.க தலைவர்கள், நிர்வாகிகள் இறந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி வருகின்றனர். எமர்ஜென்சி என்பது இந்திராகாந்தி காலத்தில் அதிகாரிகள் நடவடிக்கையால் மேற்கொள்ளப்பட்டது. அது தவறான பாதையில் சென்றதால் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆட்சி நடந்து வருகிறது.
மின் கட்டண உயர்விற்கு உதய் மின்திட்டத்தில் கையெழுத்திட்டதே காரணமாகும். ஜெயலலிதா இருந்தவரை இந்த திட்டத்தில் அவர் சேரவில்லை. ஆனால் அவா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி இந்த திட்டத்தில் சேர்ந்தார். அதனால் தான் தற்போது மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. காவிரி பிரச்சினையில் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும் அதனை கர்நாடகா அரசு மதிக்காமல் செயல்படுகிறது. 40 முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்க வேண்டிய மத்திய அரசு மெத்தனமாக உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது என்பதற்காக தமிழக மக்களின் உரிமைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழக மக்களுக்காக காவிரி நீரை பெற்றுத்தர மத்திய அரசைக் கண்டித்தும், போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.