ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக உள்ளது. இங்கு மலைக்கிராமங்களான தாளவாடி, ஜீரகள்ளி, ஆசனூர், தலமலை உள்ளிட்ட வனச்சரகங்களில் யானைகள் அதிகமாக வசிக்கின்றன. கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அவ்வப்போது விவசாய நிலங்களில் நுழைவதும், விவசாயப் பயிர்களை சேதம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், ஜீரகள்ளி வனச்சரகத்தில் கருப்பன் என்கிற ஒரு ஒற்றைக் காட்டு யானை கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக விவசாய நிலங்களில் நுழைந்து விவசாயப் பயிர்களை சேதம் செய்து அட்டகாசம் செய்தது. மேலும், அதனை விரட்டச் செல்லும் வனத்துறையினரையும் விவசாயிகளையும் துரத்தி பொதுமக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி வந்தது. எனவே, அதனை கும்கி யானைகள் மூலம் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும். இல்லையென்றால் மாற்று வனப்பகுதிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து முத்து, கபில்தேவ் ஆகிய இரண்டு கும்கி யானைகள் இங்கு வரவழைக்கப்பட்டன. அந்த கும்கி யானைகளால் கருப்பன் யானையைப் பிடிக்க முடியாததால் அதன் பிறகு ஆனைமலையில் இருந்து கலீம் என்கிற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டது. மீண்டும் கருப்பன் யானையைப் பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதனையடுத்து 13ந் தேதி இரவு வனத்துறையினர் தீவிரமாகக் களத்தில் இறங்கி கருப்பன் யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலை 3 மணியளவில் இரிபுரம் மல்குத்திபுரம் பகுதியில் கருப்பன் யானைக்கு வெற்றிகரமாக மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து தப்பி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. மீண்டும் காட்டுக்குள் வீசும் கடும் பனியிலும் குளிரிலும் வனத்துறையினர் யானையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு கும்கி யானைகள் உதவியுடன் மகாராஜபுரம் வனப்பகுதியில் கருப்பன் யானையைச் சுற்றிவளைத்து பிடிக்கும் பணியில் வனத்துறை, கால்நடை மருத்துவக்குழு என 150 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மகாராஜபுரம் சிக்கள்ளி சாலையில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 13ந் தேதி அதிகாலை 3 மணியிலிருந்து கருப்பன் யானை எட்டு மணிநேரத்திற்கும் மேலாக வனத்துறையினருக்கு போக்கு காட்டியது. மேலும், மகாராஜபுரம் வனப்பகுதியில் இருந்து மாற்று வனப்பகுதிக்கு கருப்பன் யானை தப்பிச் சென்றுவிட்டதா எனக் காட்டுக்குள் தேடி வருகிறார்கள்.
இந்த ஒற்றை யானை சுற்றுப்புற மலைக்கிராமங்களில் மலைவாசிகள் மற்றும் கால்நடைகளைக் காயப்படுத்தி விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி தொடர்ந்து காட்டை தன்வசத்தில் வைத்து இருந்தது. கருப்பனை விரட்ட வனத்துறையினர், கிராம மக்கள் ஒன்று கூடி முயன்றும் முடியாமல் ஒற்றை யானையால் பீதியில் உள்ளார்கள். மீண்டும் கருப்பன் எப்போது எந்தக் கிராமத்தில் வருவான் என்ற அச்சமும் மலைக்கிராமங்களில் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் கருப்பனைப் பிடித்து விடுவோம் எனத் தொடர்ந்து காட்டுக்குள் முகாமிட்டுள்ளனர். கருப்பன் கிடைப்பானா என்பது அடுத்தடுத்த நாட்களில் தான் தெரியும்.