மயிலாடுதுறை நகரில் நேற்று (03-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (03-04-24) இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததை கண்ட வனத்துறையினர் அதிரச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை அளித்துள்ளார். அதோடு மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் .
இந்நிலையில், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும், காவல்துறையினரும் தீயணைப்புணர் துறையினரும் இணைந்து காவிரியின் கிளை ஆறான பழங்காவெரிகரை பகுதி, பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளியின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதில், பள்ளி அமைந்துள்ள கீழ ஒத்த சரக்கு பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளனர்.
மேலும் ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க ஐந்து இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று சம்பவ இடத்தை பார்வையிட்ட சீர்காழி வனச்சரகர் ஜோசப் டேனியல் தெரிவித்துள்ளார். சிறுத்தை இரவில் மட்டுமே நடமாட்டம் அதிகம் உள்ள விலங்கு என்பதால் அதனை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் கூறுகிறார்கள்.