சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சாலையின் இருபுறங்களிலும் பல ஹோட்டல்கள், பேக்கரி கடை, பிரியாணி கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் இப்பகுதியில் வசிப்பவர்களும், வாகனங்களில் பயணம் செய்பவர்களும் இப்பகுதியில் உள்ள ஓட்டல்களிலும் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடைகளிலும் தங்களுக்கு தேவையான உணவு வகைகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் இப்பகுதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் ஆவலம் என்ற ஊரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அந்த பேக்கரி கடை ஒன்றில் ஒரு கிலோ 600 ரூபாய் விலையில் கேக் ஒன்றை வாங்கிச் சென்றுள்ளார்.
இதையடுத்து அன்று மாலை அவர் அந்த கேக்கை வெட்டி தனது தனது பிறந்த நாளை கொண்டாடினார். கேக்கை தனது நண்பர்களுக்கு சாப்பிட பகிர்ந்து கொடுக்க எடுத்தபோது கேக் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகுமார் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் அந்த பேக்கரி கடைக்கு அந்த கேக்குடன் சென்று இது குறித்து கேட்டுள்ளனர். இதனால் பேக்கரி கடை உரிமையாளர்களுக்கும் சசிகுமார் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தக் கெட்டுப் போன கேக்கை கடை உரிமையாளரிடமே கொடுத்துவிட்டு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சசிகுமார் நண்பர்கள் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து அப்பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் அன்று இரவு 8 மணி அளவில் சம்பந்தப்பட்ட பேக்கரி கடைக்குச் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பேக்கரியில் கேக் செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்த பொருட்களின் மாதிரிகளை ஆய்வு செய்ய சேகரித்தார். அதோடு வாடிக்கையாளருக்கு கெட்டுப் போன கேக்கை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தார். பேக்கரி கடையில் தயார் செய்யப்பட்ட பொருட்கள் அதை தயாரிக்க சேர்க்கப்படும் உப பொருட்கள் ஆகியவற்றை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் தரமற்றவை என்று கருதினால் கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அதிகாரி கதிரவன் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.